இருள் சூரியனிடம் தன்னை இழக்க ஆயத்தமாகித் கொண்டிருந்தது. சென்னை விமான நிலையம். தரை இறங்கியது குவைத் ஏர்வேஸ். ஐந்து வருடங்களுக்குப் பின் தாயகம் திரும்பிய மகிழ்ச்சியில் சஃபியின் மனம் குதூகலித்தது.
தாய் மண்ணின் வாசம் சுவாசத்தில் கலந்து புதிய உற்சாகத்தை அவன் உடலுக்கு வழங்கியது.
கவுண்டரில் போர்டிங் முடித்து லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினான். விமான நிலையத்தின் எதிரில்
தயாராக நின்றிருந்த சொகுசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
தயாராக நின்றிருந்த சொகுசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
முன்பை விட இப்போது சென்னையில் சாலைகள் அகலமாகவும், பிரமிப்பாகவும் தென்பட்டது அவனுக்கு. சொகுசுப் பேருந்தில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தில் அவன் மனம் நாட்டம் கொள்ளவில்லை.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவனுக்கு தமிழகத்தின் இதமான காற்று பழைய நினைவுகளில் மூழ்கிடச் செய்தது.
வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளையான சஃபிக்கு ஒரு தங்கை. பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே சைக்கிளில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த அவனது அத்தாவின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மௌத் ஆகிப்போனார். அதன் பிறகு குடும்பம் மேலும் வறுமையில் வாடியது.
சஃபியின் தாய்மாமன் முஹம்மதலிதான் குடும்பத்தின் வறுமையைப் போக்க அவ்வப்போது உதவினார். சஃபி தங்கையின் திருமணம்இ சீர்வரிசை என அனைத்து செலவுகளையும் அவர்தான் பார்த்தார். அதற்கு நன்றிக் கடனாக அவரது மகள் சம்சுல்ஹூதாவை சஃபிக்கு நிக்காஹ் செய்து முடித்தார் அம்மா.
தினகூலி வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு குவைத் விசா எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தவரும் தாய்மாமதான்.
இரண்டு வருடத்திற்கு முன் அவர் மாரடைப்பால் மௌத் ஆனபோது கூட சஃபிக்கு விடுமுறை தர மறுத்துவிட்ட அவனது கஃபில் மூன்றுமாத விடுமுறை இப்போதுதான் வழங்கியிருந்தார்.
திருமணம் ஆன சூடு மாறுவதற்குள் விட்டுச் சென்ற மனைவி இதுவரை நேரில் கண்டிராத எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருக்கும் அவனது அன்பு மகள்இ அம்மா ஆகியோரின் குரல்களை தொலைப்பேசியில் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தவனுக்குஇ அவர்களை நேரில் சந்திக்கப் போகின்ற மகிழ்ச்சி மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.
சொகுசுப் பேருந்து தொழுதூர் வந்தடைந்தவுடன் இறங்கி வி.களத்தூருக்கு அரசுப் பேருந்தில் பயணப்பட்டான் சஃபி.
வெளிநாடு செல்லும் முன் எப்படி இருந்ததோ அதே போன்று எந்த மாற்றமும் இல்லாமல் கலகலத்துப் போன பேருந்துஇ குண்டும் குழியும் மேடுமான சாலைகள். ஆவனை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு வழியாக ஊர்வந்துஇ வீடு வந்து சேர்ந்தாயிற்று.
'அஸ்ஸலாமு அலைக்கும்'
'வாப்பா சஃபி'
'பிரயாணம் நல்லபடியாக இருந்ததா?'
'நாங்களும் சென்னை வந்து உன்னை அழைக்க வரலாம்னு இருந்தோம். நீதான் வேண்டாம்னு சொல்லிட்டே.'
வீண் செலவுதானே அம்மா. அதனாலே தான் வேண்டாம்னு சொன்னேன்.
'வாங்க மச்சான்'
முகம் சிவக்க வரவேற்றாள் மனைவி சம்சுல்ஹூதா. ஆவளை அறியாமல் விழிகளில் நீர்த்துளி திரண்டு நின்றது. ஐந்து வருடம் கழித்து நேரில் பார்க்கும் பாசப் போராட்டத்தில் வார்த்தைகள் களவு போயின.
'எங்கே சம்சு பவுஜியா' என்றான்.
'அவ ஸ்கூலுக்கு போயிருக்கா'
'இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்திடுவா'
'அவளும் உங்களை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தா'
உறவினர்கள்இ தொடர்ந்து வந்து விசாரித்து சென்று கொண்டிருந்தனர்.
'அம்மா....'
'அத்தா வந்திட்டாரா...?'
வாசலில் இருந்தே தனது மழலை மொழியில் கத்திக் கொண்டே வந்த பௌஜியா பள்ளி யூனிஃபாமில் அழகுச் சிலையாக காட்சி தந்தாள் சஃபிக்கு.
'அதோ உங்க அத்தா கட்டில்;ல உட்கார்ந்து இருக்கார்.'
'வாம்மா... பௌஜியா குட்டி... அத்தா கிட்ட வா'
ஓடிவந்து தாவிக் கொள்வாள் என்று எதிர்பார்த்தவனாக கரங்களை அவள் நின்ற திசையை நோக்கி நீட்டினான்.
சில நிமிடங்கள் நின்றபடியே சஃபியை கூர்ந்து பார்த்த பௌஜியாவின் முகம் சற்று இறுகியது.
'என்னம்மா அத்தா இப்படி இருக்கார்.'
'நேசங்கள் நாடகத்துல வர்ற குமார் அங்கிள் மாதிரி இருப்பார்னு சொன்னே.'
'இவர் அப்படி இல்லையே'
'ம்கூம்'
இரு உதடுகளையும் கோணலாக்கி சலித்துக்கொண்ட பௌஜியா யாரிடமும் பேசாமல் உள் அறையை நோக்கி ஓடினாள்.
ஏம்மா... இங்கேவாம்மா எனக் கத்திய சம்சுஇ கணவனை பார்த்து
'சும்மா விளையாட்டுப் பிள்ளை தப்பா எடுத்துக்காதீங்க'
'நாளைக்கு சரியாயிடும்...'என்று கணவனுக்கு சமாதானம் கூறினாள்.
மூன்று மாத விடுமுறை முடிந்து சஃபி குவைத் வந்து சேரும் வரை பௌஜியா அவன் அருகில் கூட வரவேயில்லை.
தனது சொந்த நாட்டில் வாழ இயலாதுஇ வெளிநாட்டிற்கு வந்து இப்படி மனைவியைப் பிரிந்துஇ இல்வாழ்க்கையைத் தொலைத்துஇ பாசத்தையும் இழந்து நின்றோமோ என்ற எண்ணம்... தனது மகள் பௌஜியாவை நினைக்குந்தோறும் சஃபிக்கு எதையோ தொலைத்தது போல் அவன் மனம் அலைபாயும்.
அவனது சிந்தனையைக் கலைத்து கைபேசி சிணுங்கியது. எடுத்து பேசியவனுக்கு எதிர் முனையில் மனைவியின் குரல் கேட்க பாசத்தோடு படபடத்தன சஃபியின் இமைகள்.
'என்னங்க ஒரு சந்தோசமான சமாச்சாரம். நீங்க அத்தா ஆகப் போறீங்க..வெட்கம் கலந்த குரல் அவன் மனைவி சம்சுல் ஹூதாவிடம் இருந்து வெளிப்பட்டது.
சம்சு இனிமேல் நம்ம குழந்தைக கிட்ட யாரையும் காட்டி இவரைப்போல உங்க அத்தா இருப்பார்ன்னு சொல்லாதே... என்னோட போட்டோவை காட்டி இவரு தான் உங்க அத்தான்னு சொல்லிவை இன்ஷh அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். சஃபிக்கு குரல் தழுதழுத்தது... கைப்பேசி இயக்கத்தை நிறுத்தினான்.
இ.தாஹிர் பாஷா
0 comments
கருத்துரையிடுக