வியாழன், 30 ஏப்ரல், 2015

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம்: 6 லட்சம் ஆண்கள், 2 லட்சம் பெண்கள்

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்கையுடன் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அங்கு சட்டப்பூர்வமாக வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுதொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது:

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அடுத்தபடியாக எகிப்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர். அங்குள்ள மொத்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 6 லட்சமாகவும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சமாகவும் உள்ளது.

குவைத்தில் வசிக்கும் இந்தியர்களில் 2.8 லட்சம் பேர், ஓட்டுநர், தோட்டக்காரர், துப்புரவாளர், சமையலர் மற்றும் வீட்டுப் பணியாளர்
உள்ளிட்ட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 1.9 லட்சம் பேர் ஆண்கள், 90 ஆயிரம் பேர் பெண்கள்.

இது தவிர தனியார் நிறுவனங்களில் கட்டுமான பணியாளர், தொழில்நுட்ப பணியாளர், பொறியாளர், மருத்துவர், கணக்கு தணிக்கையாளர் மற்றும் ஐ.டி. வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்திய நர்ஸ்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.

குவைத்தில் உள்ள 20 இந்திய பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். எனினும் அங்கு இந்தியர்களுக்காக பல்கலைக்கழக அளவிலான கல்வி வசதி இல்லை. குவைத் அரசு நிறுவனங்களில் நர்ஸ், பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் 24 ஆயிரம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது. எனவே, விரைவில் இந்தியர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும். மேலும் விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக 25 ஆயிரம் இந்தியர்கள் தங்கி இருப்பதாக குவைத் அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 comments

கருத்துரையிடுக