சனி, 10 ஜனவரி, 2015

குவைத் பைலாக்கா தீவு

  குவைத் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக 20 கி.மீ. தொலைவில் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த பைலாக்கா தீவு. சாதாரண கப்பலில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்திலும், விரைவு கப்பலில் சென்றால் ஒரு மணி நேரத்திலும் அத்தீவை சென்றடையலாம். (ஃபைலக்கா என்பது போர்த்துகீசிய சொல். 'வெற்றி / ஈடேற்றம்' என்பது இதன் பொருள்).

இந்தத் தீவு, குவைத் நாட்டின் கடல் பகுதியில் ஃபாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒன்பது தீவுகளில் இரண்டாவது மிகப் பெரியதும், மக்கள் வாழ்வதற்கு தகுதியும் உள்ள ஒரு தீவாகும். 12 கி.மீ. நீளமும், 6 கி.மீ. அகலமும் உடைய நிலப்பரப்பை கொண்டது. 

கடல் மட்டத்திலிருந்து 10 மீ உயரத்தில் உள்ளது. 3000 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இத்தீவு பாரசீக வளைகுடா பகுதி வாணிபத்திற்கு முக்கிய கேந்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பல வரலாற்று தகவல்களும், பழைய கால நாணயங்களும் அந்தப் பகுதியில் கிடைத்திருப்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

அவற்றை இன்றும் குவைத் அருங்காட்சியத்தில் காண முடிகின்றது. சுமார் ஏழு கிராமங்களிலும், ஒரு நகரத்திலும் 1990ம் ஆண்டு வரை அங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 1985ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் அத்தீவில் குவைத் மக்கள் 5832 நபர்களும், வேறு நாட்டைச் சார்ந்த மக்கள் 2426 நபர்களும் வசித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

1990ம் ஆண்டு குவைத்தை ஈராக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை அங்கே மக்கள் வசிப்பதில்லை. அத்தீவை பாரம்பரிய சின்னமாக அறிவித்து விட்டது குவைத் அரசு. 

குவைத் மக்களுக்கு அத்தீவில் சொத்துக்கள் இருந்தாலும் அங்கே யாரும் வசிப்பதில்லை. விடுமுறை தினங்களை பயன்படுத்துவதற்காக அங்கே சென்று வருகின்றனர். தொழுகைக்காக 5 பள்ளிவாசல்கள் அங்கே உள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்குமிடம், உணவகம், படகு குழும் உள்ளிட்ட சுற்றுலா வாசிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.

விரைவில் இத்தீவு உலக தரத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாக அமையக்கூடும் என சில செய்தி வலைப்பதிவுகள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

0 comments

கருத்துரையிடுக