வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

குவைத் "ஹலா பிப்ரவரி" விழா

குவைத் நாட்டில் பார்க்க மற்றும் தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்கள் குவைத்திற்கு புதியவர் என்றால், இங்கு நடைபெறும் ஹலா பிப்ரவரி விழா பற்றி தெரிந்துகொள்ளவும்.

குவைத் நாட்டில் பிப்ரவரி மாதம் என்பது ஒரு அழகான மாதம். பாலைவன நிலமான குவைத்தில் பிப்ரவரி மாதம் குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் வெளிப்புற இடங்களில் அதிக நேரம் செலவழிக்க ஒரு சிறந்த மாதமாகும். 

இந்த மாதத்தில் தான் ஆண்டுதோறும் ஹலா பிப்ரவரி எனப்படும் திருவிழா நடைபெறும். மாதத்தின் முதல் நாளில் தொடங்கி கடைசி நாள் வரை நீடிக்கும் இந்த ஹலா பிப்ரவரி விழாவில் வெளிநாட்டினரும் பங்கேற்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

1999ம் ஆண்டு முதல் அரபு கலாச்சாரத்தையும், உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக குவைத்தில் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடத்தப்படுகிறது.

இந்த ஹலா பிப்ரவரி திருவிழாவானது பொதுவாக சல்மியாவில் உள்ள சலாம் அல் முபாரக் சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கப்படுகிறது.

குடிமக்கள் ஒன்று கூடுதல், விருந்து, இரவு நேரங்களில் பாலைவன முகாம், மத நிகழ்வுகள், கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்வுகள்... என இம்மாதத்தில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது.

திருவிழாவின் மிக முக்கியமான செயல்பாடு ஆங்காங்கு நிகழ்த்தப்படும்  இசை நிகழ்ச்சிகள் தான்.

இவ்விழாவைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் உள்ள கடைகளும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து கொண்டாடுகின்றன.

குவைத்தில் உள்ள அனைத்து உயர்ந்த கட்டிடங்களும் நாட்டை அலங்கரிக்கும் விதமாக வண்ண விளக்குகளால் ஒளிரும். இது குவைத்தின் அழகை ரசிக்கவும், சோதிக்கவும் சரியான தருணம்.

இந்த மாதத்தின் 25 மற்றும் 26ம் தேதிகளில் குவைத் தேசிய தினமும், விடுதலை தினமும் கொண்டாடப்படுவது இதன் தனிசிறப்பு.

குவைத் மக்கள் அணியும் ஆடை மற்றும் தொப்பியில் பச்சை, வெள்ளை, சிவப்பு, கருப்பு என தேசியக்கொடியின் நிறம் இருக்கும். இவர்கள் பயன்படுத்தும் கார் ஜன்னல் கண்ணாடியிலும், வீடுகளின் முகப்பிலும், பால்கனியிலும் தேசியக்கொடியை பறக்கவிட்டு தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தி மகிழ்வர்.

ஹலா பிப்ரவரி ஊர்வலத்தில் செல்பவர்கள் பார்வையாளர்கள் மீதும்,  பார்வையாளர்கள் ஊர்வலத்தில் செல்பவர்கள் மீதும் துப்பாக்கி மற்றும் நீர் நிரப்பப்பட்ட பலூன்களில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

இதுபோல் நாட்டில் எல்லா இடங்களிலும் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஆண்டு முழுவதும் நிலவட்டும். குவைத் குயிலின் ஹலா பிப்ரவரி வாழ்த்துக்கள்.

-மு.ஜகரிய்யா

0 comments

கருத்துரையிடுக